மழையால் வனத்துறை நிம்மதி ௵தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தொடர்ந்து வரும் கோடை மழையால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தேவையும், காட்டுத்தீ பிரச்னைக்கும் தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் வறண்டு காணப்பட்ட நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியது.இதன் காரணமாக தண்ணீர் தேடி விளை நிலங்களுக்கு படையெடுக்கும் வன உயிரினங்கள் சிக்கலில் இருந்து மீண்டன. அத்துடன் கோடையில் அதிக வெயில் காரணமாக காய்ந்த பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயும் மழையால் கட்டுப்படுத்த பட்டுள்ளன. இதனால் வனத்துறையினர் தற்காலிக நிம்மதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், பொதுவாகவே கோடையின் போது காட்டு தீ பிரச்னைஅதிகரிக்கும். இதனால் அரியவகை மூலிகைகள்,விலங்குகள் பெரும் அழிவை சந்திக்கும். தீயை கட்டுப்படுத்தவும் சிரமம் ஏற்படும். தற்போதைய கோடை மழையால் வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்சனை தீர்ந்துள்ளதுடன், மரங்கள் செடிகள் பசுமையுடன் துளிர்விட்டு வன தீ பாதிப்பிலிருந்து தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.