ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் தென்காசி ரோடு இணைப்பு சாலை
ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சங்கரன் கோவில் ரோட்டில் இருந்து தென்காசி ரோட்டிற்கு ரூ. 38.34 கோடிக்கு ரூ.2.10 கி.மீ., இணைப்பு சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தென்காசி எம்.பி., ராணி ஸ்ரீகுமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரிகள், நகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.செங்கோட்டையில் இருந்து மதுரை, தேனி, திருப்பூர், சென்னை செல்லும் பஸ்கள் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டிற்கு கலை மன்றம், ஜவஹர் மைதானம் சங்கரன்கோவில் முக்கு உள்ளிட்ட பகுதி வழியாக வந்து செல்வதால் நகரில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதற்காக புது பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள சங்கரன்கோவில்- - திருநெல்வேலி ரோட்டில் இருந்து திருமங்கலம்- -கொல்லம் நெடுஞ்சாலைக்கு இணைப்பு ரோடு 2.10 கி.மீ., துாரத்திற்கு 100 அடி அகலத்தில் நில எடுப்புடன் சேர்த்து மொத்தம் ரூ.38.34 கோடி செலவில் பணிகள் தொடங்கியுள்ளது. பணிகள் 2026 மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். இதன் மூலம் தென்காசி, மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் நகரின் போக்குவரத்து இடையூறு இன்றி வந்து செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.