உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து காரியாபட்டிக்கு பயணிகளை ஏற்ற மறுப்பு

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து காரியாபட்டிக்கு பயணிகளை ஏற்ற மறுப்பு

காரியாபட்டி; மதுரை மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டி லிருந்து காரியாபட்டிக்கு பயணிகளை ஏற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் மறுத்து வருவதால் பயணிகள் வேதனையில் உள்ளனர். காரியாபட்டி பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தினமும் மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பணிகளை முடித்துவிட்டு ஊருக்கு திரும்ப மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் தயாராக நிற்கும் அரசு, தனியார் பஸ்களில் காரியாபட்டிக்கு பயணிகள் ஏற முற்பட்டால் இறக்கி விடுகின்றனர். ஏன் எனக் கேட்டால் தகாத வார்த்தையில் பேசுகின்றனர். ஒரு சிலர் எதிர்த்து கேள்வி கேட்டால், கிளம்பும்போது மட்டும் தான் ஏற வேண்டும், என்கின்றனர். பஸ் கிளம்பும் வரை காரியாபட்டிக்கு பயணிகள் ஏற முடியாமல் வெளியில் தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னை தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதில், 7 பயணிகள் ஏறி சீட்டில் அமர்ந்து கொள்ளலாம் என பேசி முடிக்கப்பட்டது. நடைமுறைபடுத்தாமல் முடிவை காற்றில் பறக்க விட்டனர். நீண்ட நேரம் காத்திருந்து ஏற வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் மதுரை மாட்டுத்தாவணியில் தனியார் பஸ்சில் ஏறிய காரியாபட்டி பயணிகளை கடுமையாக பேசி இறக்கிவிட்டு தகாத வார்த்தையில் பேசிய சம்பவத்தால், பெரும் பிரச்னை ஏற்பட இருந்தது. பயணிகளை அவமதித்ததால் பர்மிட்டை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரியாபட்டி பயணிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ