முடங்கியாறு தடுப்பணை ஆக்கிரமிப்பு அகற்றம்--
ராஜபாளையம்: ராஜபாளையம் முடங்கி ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு கண்காணிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயில் ஆறு மூலம் உற்பத்தியாகும் நீர் கண்மாய்களுக்கு பாசனத்திற்காக திருப்பி விடப்படுகிறது. இதற்காக முடங்கியாறு பாலம் அருகே தடுப்பணை கட்டி 10 கண்மாய்களுக்கு பிரித்து விடப்படுகிறது. இதன் கிழக்கு பகுதியில் மண் மேடு உருவாக்கி சிலர் கால்நடை தீவனப்புல் வளர்த்து ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் கண்மாய்களுக்கான நதிநீர் பங்கீடு தடைப்பட்டு விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் பலனாக முதல்வரின் சிறப்பு நிதியில் ரூ.27 லட்சம் மதிப்பில் தடுப்பணை முதல் வடக்கு வெங்காநல்லுார் புதுக்குளம் வரை கால்வாய் துார் வாரும் பணி நடந்து வருகிறது. தடைகளை அகற்றியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள விவசாயிகள் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.