உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலங்களில் தடுப்புச் சுவர் ஏற்படுத்துவது அவசியம்! அசம்பாவிதங்களை தவிர்க்க வாய்ப்பு

பாலங்களில் தடுப்புச் சுவர் ஏற்படுத்துவது அவசியம்! அசம்பாவிதங்களை தவிர்க்க வாய்ப்பு

சிவகாசி: மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் ரோட்டில் உள்ள பாலங்களில் தடுப்புச் சுவர் இல்லாமல் விபத்து அபாயம் ஏற்படுகின்றது. எனவே பாலங்களில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். மேலும் வளைவு பகுதிகளிலும் தடுப்புச்சுவர் ஏற்படுத்த வேண்டும்.மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் உள்ள ரோடுகளில் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பெரும்பான்மையான பாலங்களில் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பாலங்களில் இருந்த தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளது. மேலும் பெரும்பான்மையான பாலங்களில் தடுப்புச் சுவர் இல்லை. கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதுவதால் பெரிய இழப்பு தடுக்கப்படும். அவ்வாறு தடுப்புச் சுவர் இல்லை என்றால் வாகனங்கள் பாலத்திலிருந்து கவிழ்ந்து விட வாய்ப்புள்ளது. மேலும் தண்ணீர் இருந்தால் நிலைமை இன்னும் மோசம் ஆகிவிடும். தற்போது பெய்த கோடை மலையில் பாலமுள்ள பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் கவிழ்ந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிட வாய்ப்புள்ளது. இதேபோல் ரோட்டில் திடீரென்று வருகின்ற வளைவுகளில் தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இங்கு வளைவுக்கான சிக்னல்களும் இருப்பதில்லை. அதே பகுதியில் அடிக்கடி வருகின்ற வாகனங்கள் மட்டும் கவனமாக சென்று விடலாம். ஆனால் புதிதாக வருகின்றவர்கள் இதனை கவனிக்காமல் விபத்து அபாயத்தில் சிக்குகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் வளைவுகளில் தடுப்பு வைப்பதோடு அடையாளமும் ஏற்படுத்த வேண்டும். பாலங்களில் கண்டிப்பாக தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ