ஸ்ரீவில்லிபுத்துார் -- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு ரூ.112.50 கோடி நிதி ஒதுக்கீடு
சிவகாசி : ஸ்ரீவில்லிபுத்துார் -- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டத்தில் முதற்கட்டமாக சிவகாசி -- விருதுநகர் -- அருப்புக்கோட்டை இடையே 20 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.112.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.விருதுநகர் -- ராமநாதபுரம் மாவட்டத்தை இணைக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் - -சிவகாசி - -விருதுநகர் - -அருப்புக்கோட்டை - -திருச்சுழி - -நரிக்குடி -- பார்த்திபனுார் மாநில நெடுஞ்சாலை (எஸ்.ஹெச்.42) விரிவாக்கம் செய்யப்படும் என 2014ல் தமிழக அரசு வெளியிட்ட 'விஷன் தமிழ்நாடு 2023' என்ற தொலைநோக்கு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 2018 ல் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் வெளியிட்ட தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட உள்ள நெடுஞ்சாலைகள் பட்டியலில் மதுரை - -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து (என்.ஹெச்.744) ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனுார் வழியாக சென்று கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை (என்.ஹெச்.49) இணைக்கும் 105 கிலோ மீட்டர் துார மாநில நெடுஞ்சாலையை (எஸ்.ஹெச் 43) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டங்களுக்கான முதற்கட்ட ஆய்வுக்கு கூட நிதி ஒதுக்கப்படாமல் அறிவிப்பு நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மதுரையில் நடந்த நெடுஞ்சாலை துறை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வேலு ஸ்ரீவில்லிபுத்துார் - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிவகாசியில் 2024 செப்.ல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இத்திட்டத்தை சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்துடன் சேர்ந்து ஒவ்வொரு பகுதியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் சிவகாசி - விருதுநகர் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார்- - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டத்தில் 105 கிலோ மீட்டர் நீளமுள்ள எஸ்.ஹெச் 42 மாநில நெடுஞ்சாலையில் சிவகாசி - விருதுநகர் இடையே 14 கிலோ மீட்டர் துாரமும், விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் 6 கிலோ மீட்டர் துாரம் என மொத்தம் 20 கிலோ மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு ரூ.112.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் முடிந்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.