சாத்துார் வைப்பாற்றின் கரையில் தனியார் நிலங்களில் மணல் கொள்ளை
சாத்துார்: சாத்துார் வைப்பாற்றின் கரையில் தனியார் பட்டா நிலங்களில் மணல் கொள்ளையடிப்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாத்துார் வைப்பாறு வெம்பக்கோட்டையில் உற்பத்தி ஆன போதும் மணற்பரப்பு மிகுந்த நதியாக இருந்தது.40 ஆண்டுகளுக்கு முன்பு வற்றாத நதியாக இருந்த வைப்பாறு தற்போது மழைக்காலத்தில் மட்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் உள்ளது. குறிப்பாக வெம்பக்கோட்டையில் அணை கட்டப்பட்ட பின்னர் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது மிகவும் குறைந்துவிட்டது. இதனால் மணற்பரப்பாக இருந்த வைப்பாறு கொஞ்சம் கொஞ்சமாக மணல் பரப்பை இழந்து வந்தது. வைப்பாறு மணல் நல்ல தரமாகவும் கட்டுமானத்திற்கு உகந்ததாக இருந்தால் அரசு அச்சங்குளம் எம். நாகலாபுரம் வன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனை செய்தது. மேலும் தனியார் பலரும் ஆற்றுக்குள் அனுமதியின்றி மணல் திருடி வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஆற்றுப்பகுதி முழுவதும் மணல் பரப்பு குறைந்து தற்போது கட்டாந்தரையாக மாறிவிட்டது. தற்போது வைப்பாறு முழுவதும் முள்செடி காடு போல வளர்ந்து ஆறு இருக்கும் இடமே தெரியாத நிலை உள்ளது. அரசு மணல் குவாரிகளை மூடிய நிலையில் சூரங்குடி , படந்தால், அச்சங்குளம் ஒ. மேட்டுப்பட்டி வன்னிமடை எம். நாகலாபுரம் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் பரவிக் கிடந்த மணலையும் கடந்த காலங்களில் மணல் கொள்ளையர்கள் இரவு நேரத்தில் அனுமதி இன்றி எடுத்து வந்தனர். வருவாய்த் துறையினரின் நடவடிக்கையால் மணல் கொள்ளை தடுக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக வைப்பாற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெறவில்லை ஆனால் தற்போது கடந்த சில மாதங்களாக எம். நாகலாபுரம் வைப்பாற்று கரை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இரவு நேரத்தில் அப்பகுதிக்குள் நுழையும் மர்ம நபர்கள் இயந்திரங்கள் கொண்டு மணலை கொள்ளையடித்து வருகின்றனர். இதை வருவாய்த்துறையினரும் அறிந்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். வைப்பாற்றின் கரையில் மணல் அதிகளவு எடுப்பதால் ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிவதோடு கிராமப் பகுதி முழுவதும் உப்பு நீராகும் நிலை உள்ளது .எனவே தற்போதாவது வருவாய்த் துறையினர் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.