நெல் தேக்கமடைவதற்கு மத்திய அரசே காரணம் சொல்கிறார் சாத்துார் ராமச்சந்திரன்
சாத்துார்:செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்காதால் டெல்டாவில் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார். சாத்துார் அருகே நென்மேனி ஊராட்சியில் கலெக்டர் சுகபுத்திரா தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமை ஆய்வு செய்த அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பருவ மழை பெய்து வருகிறது. திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 2பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை உரிய காலத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்ததால் பல மடங்கு அதிகமாக நெல் விளைந்துள்ளது. 52 நாட்களில் மட்டும் தமிழக அரசு 10 லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் மூடைகளை கொள்முதல் செய்துள்ளது. தினந்தோறும் 13 ரயில்கள் மூலமும்,நான்காயிரம் லாரிகள் மூலமும் நெல் மூடைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. நெல் மூடைகள் தேக்கமடைவதற்கு அதுவே காரணம். எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது என்று கூறுகிறார். மத்திய அரசு அனுமதி அளித்தால் தான் நெல் அரவை செய்யும் பணி துவக்க முடியும் என்றார்.