பள்ளி வாகனங்களில் ஆய்வு; 69 தகுதியற்றதாக அறிவிப்பு
விருதுநகர்; விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். இதில் 69 வாகனங்கள் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது.பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம், போலீஸ்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகின்றனர்.அதனடிப்படையில் நேற்று விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 46 பள்ளிகளை சேர்ந்த 249 வாகனங்கள், ஸ்ரீவில்லிபுத்துார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த 78 வாகனங்கள், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பள்ளிகளைச் 160 வாகனங்கள், அருப்புக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 21 பள்ளிகளைச் 167 வாகனங்கள், ராஜபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 45 பள்ளிகளின் 165 வாகனங்கள் என மொத்தம் 177 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 819 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.அவற்றில் 569 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 500 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 69 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி., அசோகன், தீயணைப்பு அலுவலர் சந்திரசேகர், தனியார் பள்ளிகள் டி.இ.ஓ., சுப்புராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாணிக்கம், சந்திரசேகர், வேலுமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.