செகந்திராபாத்-கொல்லம் சிறப்பு ரயில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்ல அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க செகந்திராபாத்திலிருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.வியாழன்தோறும் இரவு 8:00 மணிக்கு செகந்திராபாத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக கொல்லம் சென்றடைந்து, மறு மார்க்கத்தில் சனிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து மறுநாள் மதியம் 1:30 மணிக்கு செகந்திரபாத் சென்றடையும். இந்த ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம்அனுமதி வழங்கவில்லை. நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர்நாளிதழில் டிச.17ல் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த ரயிலின் கடைசி டிரிப்பான இன்று (ஜன. 16) செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயில் நாளை ஜனவரி 17 இரவு 7: 48 மணிக்கும், மறு மார்க்கத்தில் ஜனவரி 18 காலையில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயில் காலை 10:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்லவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஸ்டாப்பிங் வழங்கி உள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.