ஊருணியில் கழிவு நீர் கலப்பு, வாகனங்களால் நெரிசல்
காரியாபட்டி : ஊருணியில் தேங்கும் கழிவு நீரால் குடியிருப்பு வாசிகள் குடியிருக்க முடியாமல் முகம் சுளிப்பது, பிரதான வாறுகாலில் குப்பை அடைப்பால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றத்தால் அவதிப்படுவது, ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர், ஜெகஜீவன் ராம் காலனி அருகே பிரதான வாறுகால் உள்ளது. பள்ளத்துப்பட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பிரதான வாறுகால் வழியாக வெளியேற்றப்படுகிறது. தற்போது பிரதான வாறுகாலில் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக தேங்கி கிடப்பதால் பாலத்தை ஒட்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. செவல்பட்டி மந்தை ஊருணியில் கழிவு நீர் தேங்கி பச்சை பசேல் என உள்ளது. இதிலிருந்து வெளியேறும் புழுக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அருவருப்பாக உள்ளது. செவல்பட்டி காலனி மந்தையில் மக்கள் கூடும் இடத்தில் சேறும், சகதியுமாக இருப்பதால் உட்கார்ந்து பார்க்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பெயர் பலகைகள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன. வீதிகள் அடையாளம் தெரியாமல், வெளியூரில் இருந்து வருபவர்கள் சிரமமப்படுகின்றனர். ஒன்றிய அலுவலக ரோட்டில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். ஆட்கள் கூட சென்று வர முடியாத நிலை இருந்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் சென்று வருவது கடும் சவாலாக இருந்து வருகிறது. கழிவு நீரால் துர்நாற்றம்
எபினேசர், தனியார் ஊழியர்: கே. செவல்பட்டி காலனியில் மந்தையில் மக்கள் கூடும் இடத்தில் சேறும் சகதியமாக இருக்கிறது. நிகழ்ச்சி நடத்தும்போது மக்கள் உட்கார முடியவில்லை. பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். மந்தை ஊருணியில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தில் குடியிருக்க முடியவில்லை. அப்பகுதியில் நடந்து செல்ல அருவருப்பாக இருக்கிறது. கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பையால் வாறுகால் அடைப்பு
முல்லை வேந்தன், தனியார் ஊழியர்: ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கும் தெருக்களின் பெயர் பலகைகளை சீரமைக்க வேண்டும். பிரதான வாறுகாலில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. குடியிருப்பவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
திருமலை, தனியார் ஊழியர்: ஒன்றிய அலுவலக ரோட்டில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். கடைக்கு வருபவர்களும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். அப்பகுதியை கடந்து செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.