பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் ரோட்டில் கழிவுநீர்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பாதாள சாக்கடை மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவு நீர் ஓடுவதால் துர்நாற்றத்துடன் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சியில் அம்ருத் திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 2018ல் தொடங்கப்பட்டு 44 ஆயிரம் வீடுகள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் வெளியேற்றப்படும் கழிவுநீர் சஞ்சீவி மலை அருகே தொட்டியபட்டி ஊராட்சி பின்புறம் பம்பிங் செய்யப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்.ஆர்.நகரில் இருந்து கலங்காபேரி ரோட்டின் வழியே செல்லும் பிரதான குழாயில் கடந்த மூன்று நாட்களாக உடைப்பெடுத்து கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. ஏற்கனவே நீண்ட நாட்களாக இதன் அருகிலேயே கசிந்து கொண்டிருந்த கழிவு நீர் சரி செய்த நிலையில் தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. நாகராஜன், நகராட்சி கமிஷனர், ராஜபாளையம்:பாதாள சாக்கடை பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விரைந்து சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.