ஸ்ரீவி., கிராமப்புறங்களில் சாய்ந்து நிற்கும் மின்கம்பங்கள்; தாழ்வான மின் ஒயர்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கிராமப்புற ரோடுகளில் மின்கம்பங்கள் சாய்ந்தும், மின் ஒயர்கள் தாழ்வாக செல்வதால் மக்கள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் இருந்து மம்சாபுரம், அத்திகுளம், பெருமாள் தேவன்பட்டி உட்பட பல்வேறு கிராமப்புற ரோடுகளில் தற்போது அதிக லோடுகள் கொண்ட லாரிகள் சென்று வருகின்றன. இதேபோல் பல்வேறு விவசாய நிலங்களுக்கு செல்லும் கண்மாய் கரை ரோடுகளிலும் விளைபொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் இயங்கி வருகிறது.இந்நிலையில் கண்மாய் கரை , நீர்வரத்து ஓடை பகுதிகளில் காணப்படும் மின்கம்பங்கள் மழை நேரங்களில் மண்ணில் இறுக்கம்குறைந்து லேசாக சாய்ந்து நிற்கின்றன. அதில் செல்லும் மின் ஒயர்களும் தாழ்வாக செல்கிறது.வன்னியம்பட்டியில் இருந்து பெருமாள் தேவன்பட்டி வழியாக செல்லும் ரோட்டில் இத்தகைய நிலை காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியதுள்ளது.எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் பல்வேறு கிராமப்புற வழித்தடங்களில் காணப்படும் இத்தகைய மின்கம்பங்களையும், மின்வயர்களையும் சரி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.