ஸ்ரீவி.,யில் செவ்வாழை ரூ.20
ஸ்ரீவில்லிபுத்துார்: தங்கத்தை போல் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் செவ்வாழைப்பழம் கடந்த சில நாட்களாக ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒரு பழம் ரூ. 20 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் பழங்கள் அதிகமாக விற்பனை நடக்கும் நகராக ஸ்ரீவில்லிபுத்துார் விளங்குகிறது. இங்கு நாடு, கதலி, ரஸ்தாலி, பச்சை பழங்கள் விற்பனை அதிகளவில் இருந்த நிலையில் தற்போது செவ்வாழைப்பழம் விற்பனையும் அதிகரித்து வருகிறது.நாகர்கோவில், குமுளி பகுதிகளில் இருந்து அதிகளவில் செவ்வாழை வரத்துள்ளது. 90 பழங்கள் கொண்ட செவ்வாழை பழத்தாரின் விலை ரூ. ஆயிரத்து 400 முதல் விற்கப்படுகிறது. அதனை வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகள் ஒரு பழத்தை ரூ. 18 முதல் 20 வரை விற்கின்றனர். தரமான செவ்வாழை விலை ரூ.20ஐயும் கடந்து விற்கப்படுகிறது.இது ஏழை எளிய மக்களிடம் கடும் அதிர்ச்சியையும், விலை எப்போது குறையும் என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.டீக்கடை உரிமையாளர் கருப்பசாமி கூறுகையில்,செவ்வாழைப்பழத்தின் மருத்துவ பயன்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துக்கள் மூலம் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது ரூ 20 என விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.