அத்திக்குளத்தில் மேம்பாலம் கட்டி தரக்கோரி ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் அருந்ததியர் காலனியில் சேதமடைந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்தி கட்டித்தரக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த காலனிக்கு செல்வதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலத்தை மக்கள் கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, தரைப் பாலத்தை மேம்பாலமாக கட்டி தரக்கோரி பல ஆண்டுகளாக மக்கள் பலமுறை மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை, ஊர் நிர்வாகிகள், ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகள் செல்வகுமார் பொன்னுச்சாமி தலைமையில் துவக்கினார். காலையில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பெருந்திரளாக கூடிய மக்கள் மாலை 4:20 மணிக்கு ஊர்வலமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர்.