பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா மாணவர்கள் எதிர்பார்ப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர் மத்தியில்எழுந்துள்ளது.விருதுநகர் அருகே பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 245 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் சி.எஸ்.ஆர்., நிதியிலும், பள்ளிக்கல்வித்துறை நிதியிலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கூடைப்பந்து, கோ கோ, டென்னிகாய்ட் மைதானங்கள், எல்லா வகுப்புகளிலும் ஸ்மார்ட் டிவி ஆகிய வசதிகள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சி.சி.டி.வி., கேமராக்கள் கண்காணிப்பு உள்ள இப்பள்ளியில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பும் உறுதி செய்ய சத்துணவு மையத்தின் செயல்பாடுகள் ஐ.எஸ்.ஓ.,க்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இங்கு 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் நடுவப்பட்டி, சூலக்கரை என 10 கி.மீ., தொலைவிலும், ஆவடையாபுரம், வீரார்பட்டி, மேலசின்னையாபுரம் 6 முதல் 8 கி.மீ., தொலைவிலும் உள்ள பள்ளிகளுக்கு சென்று மேல்நிலைக் கல்வி படிக்க வேண்டி உள்ளது. தொலைவு என்பதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இந்த பட்டம்புதுார் உயர்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள கிராம மாணவர்களும் படிக்கின்றனர். மேலும் பள்ளிக்கு சொந்தமாக ஒருஏக்கர் நிலம் உள்ளது.இதனால் இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தினால் சுற்றுவட்டார மாணவர்களும் பயனடைவர். இதனால் இப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.