வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறையினர் பாலாலயம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்ல தங்காள் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் அறநிலையத்துறையினர் பாலாலயத்தை ஒத்திவைத்தனர்.தமிழகத்தில் அண்ணன், தங்கை பாசத்திற்கு உதாரணமாக திகழும் அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயிலில் ஜன.25 இரவு அம்மன் சிலை உடைக்கப்பட்டு தரையில் கிடந்தது. இச்சம்பவத்தில் 5 பேரை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். புதிய சிலை பிரதிஷ்டை செய்ய அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜூலை 7ல் பாலாலயம் நடக்கவில்லை.நேற்று காலை பாலாலயம் செய்ய மீண்டும் அறநிலையத்துறையினர் வருவதாக கிடைத்த தகவலையடுத்து அதிகாலை முதல் மக்கள் கோயில் முன்பு திரண்டு போராடினர். அவர்களிடம் தாசில்தார் ஆண்டாள், டி.எஸ்.பி. ராஜா, அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்தில் இருந்த சிலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதை போலீசார் தடுத்தனர்.இந்நிலையில் அர்ச்சுனாபுரத்தைச் சேர்ந்த குருவு 42, சுந்தரமூர்த்தி 32 ,ஆகியோர் மயக்கம் அடைந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கிராம மக்கள் சிலரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிவகாசியில் ஆர்.டி.ஓ. பாலாஜி தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், மக்களின் சில கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பாலாலயம் நடத்த கிராம மக்கள் பிரதிநிதிகள் சம்மதம் தெரிவித்தனர்.பின்னர் இதனை அர்ச்சனாபுரத்திற்கு வந்து மக்களிடம் கூறுகையில் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாலை வரை போராட்டம் நீடித்தது. மக்களின் எதிர்ப்பால் பாலாலயம் ஒத்திவைக்கப்படுவதாக அறநிலையத்துறையினர் தெரிவித்ததால் அனைவரும் திரும்பி சென்றனர். இப்பிரச்சனையில் அறநிலையத்துறையை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவோம் என பா.ஜ., விஷ்வ ஹிந்து பரிஷத், நாம் தமிழர் கட்சியினர் அறிவித்துள்ளனர்.