உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்கு தொடர்ச்சி மலையடிவார மலைவாழ் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு...

மேற்கு தொடர்ச்சி மலையடிவார மலைவாழ் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு...

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாக்களில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 150-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. போதிய பஸ் வசதிகள் இல்லாததால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தினசரி வருவாய் ஈட்ட முடியாத அளவிற்கு மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் வசிக்கும் மலையடிவாரங்களில் அலைபேசி நெட்வொர்க் கிடைக்காததால் தகவல் தொடர்புக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுதல் போன்ற குறைபாடுகளுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.தாணிப்பாறை ராம் நகரில் 72 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் 64 வீடுகள் மட்டுமே உள்ளது. பிளவக்கல் அணை ஜெயந்த் நகரில் 22 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் 15 வீடுகளும், கான்சாபுரம் அத்தி கோயிலில் 21 குடும்பங்கள் உள்ள நிலையில் 18 புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்து காணப்படும் வீடுகளில் வசிக்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் 29 குடும்பங்களுக்கும்உள்ள நிலையில் வீடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பழமை அடைந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது. ராஜபாளையம் அய்யனார் கோயிலில் 30 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் 20 வீடுகள் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 10 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தர முடியாத நிலை காணப்படுகிறது. இதில் ராம் நகர் அத்தி கோயில் செண்பகத்தோப்பு பகுதியில் மாவட்ட அரசு நிர்வாகமும், ராம்கோ நிறுவனமும் இணைந்து வீடுகள் கட்டிக் கொடுத்தும் பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்து தந்துள்ளனர். இந்த மலைவாழ் மக்கள் குடும்பங்களைச் சேர்ந்த 110க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆரம்ப வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை ராம்கோ நிறுவனத்தின் உதவியுடன் படித்து வருகின்றனர்.ஆனால், செண்பகத்தோப்பு, ராம் நகரில் அங்கன்வாடி மையங்கள் உள்ள நிலையில் அத்தி கோயில், ஜெயந்த் நகரில் அங்கன்வாடி மையங்கள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த மலைவாழ் கிராமங்களில் அலைபேசி நெட்வொர்க் கிடைக்காமல் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு, வெளி உலகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தினமும் காலை, மாலை இரண்டு நேரம் மட்டுமே தாணிப்பாறை, அத்தி கோயில், செண்பகத் தோப்பு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அவசர மருத்துவ வசதி பெற வேண்டிய சூழலில் ஆட்டோக்கு அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.நடமாடும் மருத்துவ குழு மாதம் ஒரு முறை மட்டுமே வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்வதால் மற்ற நேரங்களில் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லவும் போதிய பஸ் வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மலையடிவாரங்களில் பல்வேறு மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்து அதன் மூலம் பொருளாதார வருவாய் ஈட்டி வந்தாலும் தற்போதைய விலைவாசியின் காரணமாக மிகுந்த வறுமைக்கு ஆளாகும் நிலையில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைகள் குறைகள் குறித்து அவ்வப்போது கலெக்டர்கள் வந்து ஆய்வு செய்தாலும் குறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. பல ஆண்டுகளாக தொடரும் இத்தகைய குறைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.1. குடும்பங்கள் அதிகரிக்கும் நிலையில் சேதம் அடைந்த வீடுகளை இடித்து விட்டு, அனைத்து குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்.2. தற்போது தினமும் 2 முறை மட்டுமே டவுன் பஸ்கள் வந்து செல்லும் நிலையில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 6 தடவைகள் பஸ்கள் வந்து செல்லும் வகையில் இயக்க வேண்டும்.3.வாரம் தோறும் நடமாடும் மருத்துவக் குழுவினர் வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து தர வேண்டும்.4. அங்கன்வாடி மையங்கள் இல்லாத மலைவாழ் கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.5. மலைவாழ் மக்கள் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சிகள் வழங்க வேண்டும்.6. அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நல திட்ட உதவிகளையும் மலைவாழ் மக்கள் குடும்பத்திற்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மலைவாழ் மக்களின் கோரிக்கைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை