உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மைதானத்தில் குப்பை எரிப்பு புகை காலை நேர நடைபயிற்சிக்கு எமனாகுது

மைதானத்தில் குப்பை எரிப்பு புகை காலை நேர நடைபயிற்சிக்கு எமனாகுது

விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் நகராட்சி குப்பை கிடங்கில் எரிக்கப்படும் புகை பரவி காலை நேர நடைபயிற்சிக்கு எமனாகி வருகிறது.விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தினசரி சுற்றுப்புற பகுதி மக்கள் நடை பயற்சி செய்கின்றனர். உடல் ஆரோக்கியத்திற்காகவும், உடல் எடை குறைப்புக்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் இருபாலரும் வருகின்றனர். மைதானத்தில் விளையாட்டுத்துறை சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நடைபயிற்சிக்கு வரும் காலை நேரங்களில் மைதானத்தில் குப்பை எரிப்பு புகை பரவி காணப்படுகிறது.இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குப்பை எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் அலட்சியம் தொடர்கிறது. குறிப்பாக இந்த புகை நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து வருகிறது. காற்று திசை மாற்றத்தால் அதிகளவில் மைதானம், நான்கு வழிச்சாலைகளில் வியாபித்துள்ளது. எரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் நச்சு புகை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இந்த புகையால் ஆஸ்துமா, சுவாச கோளாறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காலையில் இயற்கை காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக வரும் மக்களை இந்த புகை துன்புறுத்துகிறது. இந்த பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. அவ்வப்போது புகை வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும். இங்கு நடைபயிற்சி வருவோரின் நலன் கருதி புகை வராமல் தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ