புதர்கள் மண்டி கிடக்கும் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வரும் அவலம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் புதர்கள் மண்டியும், பயன்பாடு இன்றியும் இருப்பதால் ஆக்கிரமித்து வருகின்றனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் நகரின் பல பகுதிகளில் உள்ளன. நகருக்குள் இருக்கும் இடங்கள் கடைகள், வணிக வளாகங்கள் என கட்டப்பட்டுள்ளன. நகருக்கு வெளியே சொக்கலிங்கபுரம் செம்பட்டி ஆகிய பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளன. இவற்றை முறையான பராமரிப்பு செய்யாததால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது.சொக்கலிங்கபுரம் மயான ரோட்டில் 3/4 ஏக்கரில் காலி இடம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் புதர்கள் சூழ்ந்து, விஷ பூச்சிகள் பாம்புகள் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. இந்த இடத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று பாப்பாங்குளம் கண்மாய் அருகில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் கோயிலுக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தி முறையான பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுவதால் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சென்று விடுகிறது. மாவட்ட நிர்வாகம் தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.