சாத்துாரில் 15 நாட்களாக குடிநீர் இல்லை
சாத்துார்: நான்கு வழிச்சாலையில் மழை நீர் வடிகால் பணியின் போது பகிர்மான குழாய் உடைப்பால் 15 நாட்களாக சாத்துார் நகராட்சி மக்கள் குடிநீர் வினியோகம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். சாத்துார் நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் , மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் மழை நீர் வடிகால் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பகிர்மான குழாய் உடைப்பு ஏற்பட்டது. குடிநீர் குழாய் அடுத்தடுத்து உடைந்து போன நிலையில் பெரியார் நகரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பினால் மட்டுமே பெரியார் நகர் ,காமராஜபுரம், குருலிங்கபுரம் ,ஆண்டாள்புரம், நடராஜா தியேட்டர் ரோடு உள்ளிட்ட பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும். குழாய் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலான நிலையில் இதனை சரி செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகமும், நகாய் நிர்வாகமும் மெத்தனப் போக்குடன் செயல்படுவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் நிலை உள்ளது. குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்க முடியாமல் குடங்களுடன் அலைந்து திரிந்து தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடந்து வரும் குழாய் உடைப்பு சீரமைப்பு பணியை விரைந்து முடித்து சீரான குடிநீர் வினியோகம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி கமிஷனர் ஜெகதீஷ்வரி கூறியதாவது: பெரியார் நகர்மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்துள்ளது. இதனை நகாய் நிர்வாகம் சரி செய்து தருவதாக கூறியுள்ளனர். புதிய குழாய்க்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் 3 நாட்களில் சரி செய்து தருவதாக கூறியுள்ளனர். சரி செய்யாவிட்டால் லாரி மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.