நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லை
நரிக்குடி : நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.நரிக்குடியில் திறந்தவெளியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. அருப்புக்கோட்டை, பார்த்திபனூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஒரு சில ஊர்களுக்கு நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பயணியர் நிழற்குடை கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் உட்கார முடியாத நிலை உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.தாகத்தால் பயணிகள் தவித்து வருகின்றனர். அருகில் உள்ள கடைகள், டீ கடைகளில் தண்ணீர் கேட்டால் முகம் சுளிக்கின்றனர். அப்படியே ஒரு சில கடைகளில் வைத்திருந்தாலும் உப்பு தண்ணீராக இருக்கிறது. இதனை குடித்தால் தாகம் அடங்காது, பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பஸ் ஸ்டாண்டில் சுத்திகரித்த குடிநீர் வழங்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.