உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பேரூராட்சி கடை வாடகை அதிகரிப்பு

 பேரூராட்சி கடை வாடகை அதிகரிப்பு

காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடை வாடகை அதிகரிப்பால் கடை எடுத்தவர்கள் சிரமப்படுகின்றனர். வாடகை செலுத்த முடியாமல் மூடிய கடைகளால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. காரியாபட்டி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. ஒரு கடைக்கு ரூ. 2 ஆயிரம் வரை வாடகை இருந்ததால், கிராக்கி இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரு புறங்களில் இருந்த பழைய கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய கட்டடங்களில் கூடுதல் கடைகள் கட்டப்பட்டன. இதில் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதமுள்ள கடைகள் கவுன்சிலர்கள், வெளி நபர்களுக்கு ஒதுக்கப்பட்டது. வைப்புத் தொகையாக, கீழ் உள்ள கடைகளுக்கு ரூ. 1 லட்சம், மேல் கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் பெறப்பட்டது. வாடகையாக ரூ. 8 ஆயிரம், ஒரு சில கடைகளுக்கு ரூ. 8 ஆயிரத்து 100, 150 என நிர்ணயிக்கப்பட்டது. பல மடங்கு கட்டண உயர்வால் வாடகைக்கு எடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடை எடுத்தவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர். பின், 3 மாத வாடகை செலுத்தினால், வாடகை குறைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 3 மாத வாடகை செலுத்தியும், நடவடிக்கை இல்லை. அதற்கு பின் 8 மாதங்களாக வாடகை செலுத்தாமல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்த வாடகையை நிர்ணயித்து, அனைத்து கடைகளையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ