உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் பேரிகார்டுகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைப்பதால் அவதி

போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் பேரிகார்டுகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைப்பதால் அவதி

விருதுநகர் : விருதுநகர் நகர்ப்பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் ரோட்டின் மையப்பகுதிகளை பிரிக்கும் வகையில் வைத்துள்ள பேரிகார்டுகளால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. தேர்வு நிலை நகராட்சியான விருதுநகரில் பெருந்தலைவலியாக இருப்பது ஆக்கிரமிப்புகள் தான். ஆக்கிரமிப்புகளால் மாநில நெடுஞ்சாலைகள் சுருங்கி விட்டன. மெயின் பஜார் சுருங்கி நடைபாதையாகி விட்ட நிலையில், அடுத்ததாக கச்சேரி ரோடு, சேதப்பந்து மைதான பகுதிகளை ஆக்கிரமிப்புகள் திக்குமுக்காட செய்து வருகின்றன. தற்போது ரயில்வே பீடர் ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. இன்று வரை எந்தவித நடவடிக்கையும் நகராட்சி எடுக்கவில்லை. ஆனால் போலீசாரோ விபத்தை கட்டுப்படுத்த ரோட்டின் நடுவே பேரிகார்டுகளை வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பு ஏதும் அகற்றாமல் பேரிகார்டுகளை வைத்துள்ளதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்ல முடிவதில்லை. அவ்வாறு சென்றாலும் தடுமாறி விழும் அளவுக்கு இடநெருக்கடி உள்ளது. போலீசாரோ அதே பகுதியின் முக்கில் ஹெல்மெட் சோதனை செய்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றாமல் பேரிகார்டுகள் வைப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரயில்வே பீடர் ரோட்டில் ரோட்டுக்கடைகள் பெருகி வருகின்றன. நகராட்சி ஊழியர்கள் சிலர் கவனிப்பு பெற்ற பின் அனுமதிக்கின்றனர். இதனால் நகரின் ஒழுங்கு வரையற்ற நிலை காணப்படுகிறது. இதை முளையிலே கிள்ளி எறியாவிட்டால் வரும் நாட்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கும். பேரிகார்டுகளை நடுவீதியில் வைப்பதால் விபத்து தான் ஏற்படும் அபாயம் உள்ளது.மாவட்ட நிர்வாகம் கலந்தாலோசித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டில் பாதசாரிகள் நடக்க வசதி செய்த பின் இது போன்று சென்டர் மீடியன் தடுப்புகளை ஏற்படுத்தலாம். அதை விடுத்து தற்காலிக பேரிகார்டுகள் வைப்பதும், அவை காற்றில் பறந்தால் விபத்து தான் நிச்சயம். நகராட்சி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 18, 2025 10:28

இன்றைக்கு சென்னை உட்பட பெரும்பாலான பெரு நகரங்களில் மக்கள் நடந்து செல்வதற்கு கூட இடமில்லை. சாலையின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சாலையோர கடைகள் கட்டுப்பாடின்றி பெருகிவிட்டன. மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து நடு ரோட்டில்தான் நடக்க வேண்டியுள்ளது. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? நண்பர் வசிக்கும் கூடுவாஞ்சேரி பகுதி மிகவும் மோசம். மக்கள் பயன்படுத்துவதற்கு சேவை சாலைகள் Service Rode இல்லாததால் ஏராளாமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிறு குழந்தைகள், வயதான முதியவர்கள் யாரும் வெளியே செல்லமுடியாத நிலை உள்ளது. ஏனென்றால், நடந்து செல்வதற்கு இடமில்லை. நான்கு வழி சாலையில் இரு வழிசாலைதான் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மற்றதெல்லாம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் என்னதான் செய்கிறது என்று தெரியவில்லை. பணம் வாங்கிக்கொண்டு எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.


முக்கிய வீடியோ