உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் இரண்டு பொதுப்பெட்டிகள் குறைப்பு

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் இரண்டு பொதுப்பெட்டிகள் குறைப்பு

விருதுநகர்:செங்கோட்டை மயிலாடுதுறை ரயிலில் இரண்டு பொதுப் பெட்டிகள் முன்னறிவிப்பின்றி குறைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.செங்கோட்டை- மதுரை செங்கோட்டை பாசஞ்சர் (56735/56732), மயிலாடுதுறை- திண்டுக்கல் - மயிலாடுதுறை பாசஞ்சருடன் (16847/16848) இணைக்கப்பட்டு செங்கோட்டை- மயிலாடுதுறை பாசஞ்சராக 2022 அக்., முதல் இயக்கப்படுகிறது.செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட பின் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இதனால் சாதாரண நாட்களிலும் பயணிகள் இடமின்றி படிக்கட்டுகளிலும், கதவோரங்களிலும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.இந்நிலையில் செங்கோட்டையில் இருந்து நேற்று (ஏப்.,30) காலை 6:55 மணிக்கு புறப்பட்ட ரயிலில் 8 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் என 10 பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டது. இதனால் காலையில் தென்காசி, ராஜபாளையம் வழியாக விருதுநகர், மதுரைக்கு வேலைக்குச் செல்வோர் கூட்ட நெரிசலில் சிக்கினர். பெட்டி குறைப்புக்கான அறிவிப்பு முன்கூட்டியே ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பொதுப் பெட்டிகளை இணைத்து இயக்க மாதக்கணக்கில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் இருக்கின்ற பெட்டிகளும் குறைக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்தனர்.இதுகுறித்து ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‛‛பெட்டி குறைப்புக்கான காரணம் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்த வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு கருதி் இந்த ரயிலில் கூடுதலாக 8 பொதுப் பெட்டிகள், கோடையை முன்னிட்டு ஒரு முன்பதிவு கொண்ட ஏ.சி., சேர்கார் பெட்டி இணைத்து 21 பெட்டிகளுடன் இயக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ