திருமணத்திற்கு சென்ற இருவர் உறை கிணற்றில் சடலமாக மீட்பு
சாத்துார்: விருதுநகர் மாவட்டம், தொம்பக் குளத்தை சேர்ந்தவர்கள் ரவிகுமார், 47, சுரேஷ் குமார், 45. இருவரும் அக்., 31ல் உறவினர்களுடன் திருமணத்தில் பங்கேற்பதற்காக, வேப்பிலைப்பட்டி கெங்கை அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அதிகாலையில் மாயமாகினர். இந்நிலையில், கோவில் அருகே அர்ச்சுனா நதி ஆற்றில், உறை கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக, அப்பைய நாயக்கன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், மண் அள்ளும் இயந்திரம் மூலம் கிணற்றை தோண்டிய போது, மாயமான இருவரும் பிணமாக அங்கு கிடந்தனர். இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், 'இப்பகுதிகளில் வயல் காடுகளில் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளனர். இதில் சிக்கி இறந்த இருவரையும், மர்ம நபர்கள் உறை கிணற்றில் துாக்கி போட்டுள்ளனர்' என்றனர். இதுகுறித்து, வேப்பிலைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.