பஸ்கள் நிறுத்துமிடத்தில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் பஸ்கள் நிற்கும் இடத்தில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் போலீசார் சரி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் தினமும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் நிலையில் தற்போது தற்காலிக கடைகள் அமைக்க செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வந்து செல்ல முடியாமல் தென்காசி, திருநெல்வேலி செல்லும் பஸ்கள் சர்ச் சந்திப்பில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.இந்நிலையில் தற்போது அனைத்து மினி பஸ்களும் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படுவதால் மேலும் இட நெருக்கடி அதிகரித்து எளிதில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் 7 பஸ்கள் நிறுத்துவதற்கான ரேக்குகளில் டூவீலர்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு டவுன் பஸ்களும், மினி பஸ்களும் ஒழுங்கின்றி நிறுத்தப்பட்டு மேலும் சிரமம் அதிகரிக்கிறது.எனவே, பஸ் ஸ்டாண்டுக்குள் நிறுத்தப்படும் டூவீலர்கள் அப்புறப்படுத்தி பஸ்கள் நிற்பதற்குரிய இடத்தை ஒதுக்கி தர நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் டிரைவர்கள், மக்கள் எதிர்பார்க்கின்றனர்.