சுவர் இடிந்து விழுந்து --50 ஆடுகள் நசுங்கி பலி
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கனமழையால் தனியார் அரிசி ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழுவத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சி அம்மையப்பபுரத்தை சேர்ந்த முருகன் 48. இவர் 120க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். மேய்ச்சல் முடிந்து நேற்று முன் தினம் இரவு தொழுவத்தில் அடைத்திருந்தார். ராஜபாளையம் பகுதியில் இரவு பெய்த கன மழையில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு தொழுவத்தை ஒட்டி உள்ள அரிசி ஆலையின் 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 50 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தன. தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி ஆடுகளின் உடல்களை மீட்டனர். சேத மதிப்பு குறித்து வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர். இடிபாடுகள் மீதமுள்ள அரிசி ஆலையின் சுற்றுச்சுவர் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முற்றிலும் அகற்ற தாசில்தார் ராஜீவ் காந்தி உத்தரவிட்டுள்ளார்.