இடியும் நிலையில் குடிநீர் தொட்டி, குறைவான பஸ் வசதி
காரியாபட்டி : நீர் கசிந்து இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி, பராமரிப்பு இல்லாத குளியல் தொட்டி, அங்கன்வாடி மையம், பள்ளி நேரங்களில் பஸ் வசதி இல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கழுவனச்சேரி குடியிருப்போர் நல சங்கத்தினர் சிரமத்தில் உள்ளனர். காரியாபட்டி கழுவனச்சேரி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் விக்னேஷ், குருநாதன், துளசிகுமார், உதயகுமார், சிவன், சரவணகுமார் கூறியதாவது. இங்கிருப்பவர்களில் அதிகமானோர் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். அதிகாலை 5:45க்கு மதுரையில் இருந்து ஊருக்குள் பஸ் வந்து செல்கிறது. அடுத்து இரவு 9:45க்கு வருகிறது. ஒரு சில நேரங்களில் ஊருக்குள் வராமலே சென்று விடுகின்றனர். இதனால் வெளியூர் வேலைக்கு செல்பவர்களுக்கு எந்த பயன்பாடும் கிடையாது. காலை, மாலை பள்ளி நேரங்களிலும், கூடுதலாக வெளியூர் வேலைக்கு சென்று திரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இங்குள்ள மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து நீர் கசிவு ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. குளியல் தொட்டி, சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. மயானத்திற்கு மெட்டல் ரோடு போடப்பட்டது. ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகின்றன. தார் ரோடு போடாததால் கற்களால் இடறி கீழே விழும் நிலை உள்ளது. இறப்பு சமயத்தில் மயானத்திற்கு சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மயானத்தில் தெரு விளக்கு வசதி இல்லை. தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். மயான கூரை, தண்ணீர் வசதி எதுவும் இல்லை. கண்மாயில் உள்ள நாணல்களை அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.