மகப்பேறு மருத்துவமனை முன் முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகள் கட்டுப்படுத்துவார்களா அதிகாரிகள்
ராஜபாளையம் : ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு புதிதாக முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். ராஜபாளையம் நகர் பகுதி நடுவே அரசு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. நகரின் முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளதால் அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்து மறைப்பது, ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்துவது உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது முளைக்கும். இப் பிரச்சனை தொடர்ந்ததால் சமூக ஆர்வலர் சார்பில் மருத்துவமனை முன்பு கட்அவுட், பிளக்ஸ் போர்டு உள்ளிட்ட எந்த வித ஆக்கிரமிப்பிற்கும் அனுமதி இல்லை என நீதிமன்ற உத்தரவு பெற்று அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக புதிய கடைகள் மருத்துவமனை எதிரே தேசிய நெடுஞ்சாலையில் முளைத்துள்ளது. இதை அகற்ற சென்ற போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீமானை ஜாதி சங்கத்தினர் ஒருமையில் பேசி பிரச்சனை செய்ததால் அகற்ற முடியாமல் திரும்பி உள்ளார். இது குறித்து குமார்: ஏற்கனவே பல வருடங்களாக இங்கு ரோட்டை ஒட்டி ஆட்டோக்கள் ஆக்கிரமித்து இருந்ததை மிகுந்த சிரமத்துடன் அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. மீண்டும் ஏற்படாத வகையில் வேலியிட்டு சாலையோரப் பூங்கா அமைத்து பராமரிக்கின்றனர். இந்நிலையில் புதிதாக தள்ளு வண்டியில் இறைச்சி உணவகங்கள் முளைப்பது சுகாதார கேடுடன் போக்குவரத்திற்கும் மிகுந்த சிரமம் ஏற்படும். மாவட்ட நிர்வாகம் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்.