சுந்தரபாண்டியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் வருமா
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியத்தில் முழு நேர அரசு மருத்துவமனை இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்குள்ள மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கும் வகையில் முழு நேர அரசு மருத்துவமனை இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்ட அம்மா மருந்தகமும் மூடப்பட்டுள்ளது. விவசாயிகள் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த இந்த பேரூராட்சியில் உள்ள மக்கள் சிகிச்சை பெறுவதற்காக தற்போது கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் என அலைய வேண்டியுள்ளது இதனால் நேர விரயம், பணவிரயத்திற்கு ஆளாகின்றனர். மேலும் கர்ப்பிணிகள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் மேலும் கூடுதல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.