அரசு பஸ்களில் கதவுகள் பொருத்தும் பணிகள்... முடிக்கவில்லை: தொடரும் படிக்கட்டு பயணத்தால் பயணிகள் அச்சம்
மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்தம் 462 பஸ்கள் உள்ளது. இதில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இங்குள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2430.மேலும் ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு துாரம் 1.95 லட்சம் கி.மீ., மாதத்திற்கு 58.50 லட்சம் கி.மீ., இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினசரி 2.01 லட்சம் பயணிகளும், மாதத்திற்கு 60.30 லட்சம் பயணிகள் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இயக்கப்படுகிறது.இந்நிலையில் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அரசு பஸ்களுக்கும் கதவுகள் அமைக்கும் பணிகள் மதுரை அரசு போக்குவரத்து தலைமையகத்தின் கீழ் இயங்கும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் அரசு போக்குவரத்து மண்டலங்களில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு துவங்கியது.இந்த கதவுகள் ஏர்லாக் முறையில் இயங்குவதால் அதற்கு தேவையான பணிகளை மட்டும் பணிமனை ஊழியர்கள் செய்து கொடுத்தனர். தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெடிமேட் கதவுகளை அந்தந்த பணிமனைகளில் கதவுகள் இல்லாத அரசு பஸ்களுக்கு பொருத்தும் பணிகள் நடந்தது.ஆனால் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் ஒரு பணிமனைக்கு 5 முதல் 10 பஸ்கள் என மொத்தம் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் 70 க்கும் மேற்பட்ட பஸ்களில் கதவுகள் பொருத்தப்படாமல் தினசரி இயக்கப்படுகிறது.அரசு பஸ்களில் கதவு அமைக்கும் பணிகளை துவங்கிய ஒப்பந்த நிறுவனம் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் படிக்கட்டில் தொங்கிய நிலையில் தினசரி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு சென்று வருபவர்கள் ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொள்ளும் நிலையே நீடிக்கிறது.மேலும் ஊரகப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் எப்போதும் கூட்டமாக இருப்பதால் படிக்கட்டில் தொங்கும் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் விடுபட்ட அனைத்து அரசு பஸ்களிலும் கதவுகள் பொருத்தும் பணியை செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.