உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூடிய பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசியில் தொழிலாளர்கள் போராட்டம்

மூடிய பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசியில் தொழிலாளர்கள் போராட்டம்

சிவகாசி: சிவகாசி பகுதியில் விதி மீறல் காரணமாக மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க கோரி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்தை தடுக்கும் வகையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட ஆய்வு குழு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி விதிமீறல் உள்ள ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வருகின்றது. அதன்படி கடந்த 10 மாதத்தில் மட்டும் விதிமுறையை மீறியதாக 80 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்காததால் 8000 தொழிலாளர்கள் வரை வேலை இழந்துள்ளனர். விதிமீறல் காரணமாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படும் ஆலைகளுக்கு, மீண்டும் விதிக்கு உட்பட்டு செயல்பட தயாரான நிலையில் 42 நாட்களுக்குள் மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கி வந்தது. ஆனால் ஒரு ஆண்டாக தற்காலிக உரிமம் ரத்து செய்யப்படும் ஆலைகளுக்கு 10 மாதங்களுக்கும் மேலாக மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்தனர். எனவே பட்டாசு ஆலைகளை திறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் மூடப்பட்ட பட்டாசு ஆலை முன்பாக அமர்ந்து பட்டாசு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 மாதத்திற்கு மேலாக வேலை இழந்து குடும்பத்தை நடத்த முடியாமலும், பட்டாசு வேலையை நம்பி வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை