விருதுநகர் அரசு மருத்துவமனையில்உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் நிறுத்தம் வேலையிழந்த வாலிபர் கைது
விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் திரவ ஆக்ஸிஜன் பிளான்டின் வால்வை அடைத்த முன்னாள் ஊழியர் சரவண குமாரை 26, போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 1240 படுக்கைகள் உள்ளன. உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதற்காக ரெனால்ட் நிசான் டெக்னாலஜி, பிசினஸ் சென்டர் இந்தியா நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு அமைப்பு 2022 --23ல் அமைக்கப்பட்டது.மேலும் காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தானியங்கி பிளான்ட் என்.எல்.சி., நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து 2021-22 ல் அமைக்கப்பட்டது.இவற்றில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிளான்டில் இருந்து பகலில் உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. இரவில் திரவ ஆக்ஸிஜன் சேமிப்பில் இருந்து நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. திரவ ஆக்ஸிஜன் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.நேற்று அதிகாலை 2:30 மணிக்கு இங்கு திரவ ஆக்ஸிஜன் பிளான்டில் இருந்து உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளையில் 25 நிமிடங்கள் தடை ஏற்பட்டது. இதையடுத்து செவலியர்கள், டாக்டர்கள் சுதாரித்து அந்த பிளான்ட் வால்வு அடைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து சரிசெய்து சப்ளையை சீரமைத்தனர். இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து எஸ்.பி., கண்ணனிடம் தெரிவிக்கப்பட்டது.போலீசார் வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் திரவ ஆக்ஸிஜன் பிளான்ட் அமைந்துள்ள பகுதிக்கு ஒருவர் சென்று வருவது தெரிந்தது.விசாரணையில் அவர் மல்லாங்கிணரை சேர்ந்த சரவண குமார் 26, என்பதும் ஆக்ஸிஜன் பிளான்ட் பராமரிப்பாளராக இருந்து கடந்த வாரம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தால் நீக்கப்பட்ட 132 ஊழியர்களில் இவரும் ஒருவர் என்பது தெரிந்தது. அவர் வேலையிழந்ததால் மனவேதனையில் ஆக்ஸிஜன் பிளான்ட் வால்வை அடைத்தது தெரிந்தது. சரவண குமாரை போலீசார் கைது செய்தனர்.