மாநில நுகர்வோர் ஆணைய கிளை மதுரையில் நிறுவ கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
மதுரை: மதுரையில் மாநில நுகர்வோர் ஆணையத்தின் கிளையை நிறுவ கோரி, தாக்கலான பொது நல வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, இது குறித்து பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மைய சட்ட ஆலோசகர் ஏ.காஜா மொய்தீன் தாக்கல் செய்த பொது நல வழக்கு: மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவுகளை எதிர்த்து, சென்னை மாநில ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டியுள்ளது. அதை தவிர்க்க, மாநில நுகர்வோர் ஆணைய கிளையை மதுரையில் நிறுவ, தென் மாவட்டத்தினர் வலியுறுத்துகின்றனர். நுகர்வோர் சட்டப்பிரிவு 17, மதுரையில் ஆணைய கிளையை நிறுவ வழிசெய்கிறது. நுகர்வோர் கிளையில் ஐகோர்ட் கிளை எல்லைக்கு உட்பட்ட மதுரை உட்பட 13 மாவட்ட நுகர்வோர் கோர்ட் மேல்முறையீடுகளை விசாரிக்கலாம். தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன், ஆணைய கிளையை நிறுவ, ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த ஐகோர்ட் கிளை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. பல தரப்பினரும் மனு கொடுத்தும், அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் நுகர்வோர் ஆணைய கிளை மதுரையில் செயல்படவில்லை. கிளையை நிறுவ உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, சுந்தரேஷ் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோக செயலாளர், மாநில கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர், மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப பெஞ்ச் உத்தரவிட்டது.