வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை :கணவர், மாமனார், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
திருவள்ளூர் :வரதட்சணைக் கொடுமை காரணமாக, பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவர், மாமனார், மாமியாருக்கு, தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட, வெள்ளச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தனலஷ்மி,24. இவருக்கு, 2008 மார்ச் 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. கணவர் மகேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.திருமணத்துக்குப் பின், தனலஷ்மியை அவரது கணவர் மகேஷ், மாமனார் ராமச்சந்திரன், மாமியார் வசந்தா ஆகியோர், வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தினர். இதனால், மனமுடைந்த தனலஷ்மி, 2009 மார்ச் 6ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக, முத்தாபுதுப்பேட்டை போலீசார், இறந்த தனலஷ்மியின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோருக்கு எதிராக, வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, வழக்கு திருவள்ளூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.அரசுத் தரப்பில், வழக்கறிஞர் கடம்பத்தூர் சௌந்தர்ராஜன் ஆஜரானார். இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விரைவு கோர்ட் நீதிபதி சாவித்ரி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மகேஷ், மாமனார் ராமச்சந்திரன் மற்றும் மாமியார் வசந்தா ஆகியோருக்கு, தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.அபராதத் தொகை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து, மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.