உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வில் கடும் போட்டி

காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வில் கடும் போட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க., உட்பட மற்ற கட்சிகளில், போட்டி குறைவாகவே உள்ளது. சில வார்டுகளில் விருப்ப மனு கொடுக்க, யாரும் முன் வராதது தி.மு.க., தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ., சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க.,வில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மைதிலி திருநாவுக்கரசு, பாலாஜி, காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ரங்கநாதன், நகராட்சி துணைத் தலைவர் சம்பந்தம், கவுன்சிலர் கண்ணன், அன்பு உட்பட 20 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தி.மு.க.,வில் முன்னாள் நகராட்சி தலைவர் சன்பிராண்ட் ஆறுமுகம், நகரச் செயலர் சேகர், ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் ரகு, இளங்கோ, முன்னாள் நகராட்சி தலைவர் கருணாநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். பா.ம.க.,வில் கவுன்சிலர் உமாபதி, மாவட்டத் தலைவர் குமாரசாமி ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க.,வில் நகரச் செயலர் ஏகாம்பரம், அவைத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் பூபதி உட்பட ஏழு பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

நகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் போட்டியிட, அ.தி.மு.க.,வில் 224 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தி.மு.க.,வில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. மொத்தம் உள்ள 51 வார்டுகளில், 15 வார்டுகளில் போட்டியிட யாரும் மனு கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை அழைத்து, யாரும் மனு செய்யாவிட்டால், நன்றாக இருக்காது எனக் கூறி, வலுக்கட்டாயமாக மனு கொடுக்க வைத்துள்ளனர். பா.ம.க.,வில், 29 வார்டுகளில் போட்டியிட மனு கொடுத்துள்ளனர். தே.மு.தி.க.,வில் 51 வார்டுகளில், 98 பேர் மனு கொடுத்துள்ளனர். தே.மு.தி.க., பா.ம.க., ஆகியவற்றில், தொடர்ந்து மனுக்கள் வாங்கும் பணி நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டாதது, கட்சித் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறும்போது,'நகராட்சியில் கடந்த முறை கவுன்சிலராக இருந்தவர்களில், ஆறு பேர் மட்டுமே சம்பாதித்தனர். கட்சியில் ஒரு சிலரே கமிஷன் தொகை முழுவதையும் பங்கிட்டுக் கொண்டனர். மற்ற கவுன்சிலர்களுக்கு, ஐந்து வருடத்தில் 27 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. தேர்தலில் பல லட்சம் செலவழித்து, ஒரு பலனும் கிடைக்கவில்லை. மக்களிடம் நல்ல பெயரும் எடுக்க முடியவில்லை. எனவே, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, பணத்தை இழக்க தற்போதைய கவுன்சிலர்கள் தயாராக இல்லை. ஆளும் கட்சியாக இருந்தாலாவது பயனிருக்கும். எதிர்கட்சியாக இருப்பதால், கட்சியினர் போட்டியிட தயங்குகின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி