உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வு நேரத்தில் தேர்தல் பயிற்சி:அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு

தேர்வு நேரத்தில் தேர்தல் பயிற்சி:அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு

பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு துவங்கியுள்ள நேரத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்பில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், தேர்வை கண்காணிப்பதா, பயிற்சி வகுப்பில் பங்கேற்பதா என தெரியாமல், அரசு பள்ளி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக, ஆசிரியர்கள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. திருத்தணி ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

தற்போது, ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கடிதம் அனுப்பும் பணி நடந்து வருகிறது. திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 12 வார்டுகளில், 126 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.ஒரு ஓட்டுச் சாவடிக்கு, தேர்தல் அலுவலர் உட்பட, ஏழு பேர் வீதம் தேர்வு செய்து, அவர்கள், மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி வகுப்பிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என, ஒன்றிய ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.அதேபோல், நகராட்சி வார்டுகளுக்கான ஓட்டுச் சாவடிகளிலும், தலா, ஏழு பேர் வீதம் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களையும் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வகுப்பிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் இன்றும் (22ம் தேதி), 29ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 2ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. மூன்று பயிற்சி வகுப்புகளிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என, அந்தந்த தேர்தல் பொறுப்பாளர்கள் (கமிஷனர்கள்) உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று முதல், காலாண்டுத் தேர்வு துவங்கியுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித் தேர்வுகளும் நேற்று துவங்கின. 22, 29ம் தேதி ஆகிய இரு நாட்களிலும் மாணவர்களுக்கு தேர்வு உள்ளது. தேர்தலில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும், தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்வதா, காலாண்டுத் தேர்வை கண்காணிப்பதா என, புலம்பி வருகின்றனர்.பொதுவாக, தேர்தல் பயிற்சி வகுப்புகள், அரசு விடுமுறை நாட்கள் அல்லது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தான் நடைபெறும். ஆனால், இந்தாண்டு, காலாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை