மாஜி அமைச்சர் உட்பட மூவர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்
சேலம் : சேலத்தில் நில அபகரிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், வழக்கறிஞர் தெய்வலிங்கம் ஆகியோரின் ஜாமின் மனுவை, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் பிரேம்நாத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஸ்ரீரங்கநாதன், பாலகுருமூர்த்தி, வழக்கறிஞர் தெய்வலிங்கம் உட்பட, 16 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையிலும், சுரேஷ்குமார் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ்குமார், வழக்கறிஞர் தெய்வலிங்கம் ஆகியோர், ஜாமின் கேட்டு, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், விசாரணை நடத்தினார். அரசு தரப்பு வழக்கறிஞர் தனசேகரன், 'முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்ட, நில அபகரிப்பு முயற்சி வழக்கு விவரங்கள் குறித்த சி.டி.,யை, போலீசார் என்னிடம் அளிக்கவில்லை. இவ்வழக்கு சம்பந்தமாக முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்' என்றார்.
டில்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதத்தில் பங்கேற்கவில்லை. வீரபாண்டி ஆறுமுகம் சார்பில் அவரது மகன் பிரபு, பாரப்பட்டி சுரேஷ்குமார் சார்பில் அவரது சகோதரர் குமார் மற்றும் தெய்வலிங்கத்தின் மனைவி உள்ளிட்டோர், 'ஜாமின் மனு மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தால், கூடுதல் காலதாமதம் ஏற்படும். எனவே, மனுவை தள்ளுபடி செய்து கொடுக்க வேண்டும்' என, நீதிபதி பாஸ்கரனிடம் கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து, மூவரின் ஜாமின் மனுவை, தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.