சித்ரவதைக்கு பயந்து தப்பியவர் மரணம்: ஐகோர்ட் உத்தரவு
மதுரை: கரூரில் சாயப்பட்டறையில் கொத்தடிமையாக நடத்தப்பட்டவர், சித்ரவதைக்கு பயந்து தப்பி, மர்மமான முறையில் இறந்த வழக்கை எஸ்.பி., கண்காணித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பரமத்திவேலூரை சேர்ந்த அசோக்குமார் தாக்கல் செய்த மனு: என் தங்கை தேன்மொழி. அவரது கணவர் காளியப்பன். இவர்களுக்கு இரு மகன்கள். தேன்மொழியும், காளியப்பனும் கரூரில் ராசப்பன் சாயப்பட்டறையில் வேலை செய்தனர். அவர்கள் ரூ.80 ஆயிரம் கடன் பெற்றிருந்தனர். அங்கு கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். சித்ரவதைக்கு பயந்து காளியப்பன் அங்கிருந்து தப்பினார். பின், கிருஷ்ணகிரியில் இருந்த அவரை பட்டறை உரிமையாளர் மீட்டு வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் காளியப்பன் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வழக்கு பதிந்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தேன்மொழியை இரு குழந்தைகளுடன் காணவில்லை. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அழகுமணி, மலைக்கனி ஆஜராயினர். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவில், ''இதுகுறித்து கரூர் எஸ்.பி., தனியாக டி.எஸ்.பி.,யை நியமித்து, விசாரித்து விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.