| ADDED : அக் 03, 2011 06:32 PM
திருச்சி: ''ஓட்டுக்காக அன்பளிப்போ, பணமோ பெறும் வாக்காளருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை கிடைக்கும்,'' என, திருச்சி கலெக்டரும், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அலுவலருமான ஜெயஸ்ரீ, பொதுமக்களை எச்சரித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 13ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலை நேர்மையாக நடத்த, அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதுகுறித்து கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஜெயஸ்ரீ, நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் குற்றம். பணம் வாங்குவதும் குற்றம். இதுவரை வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு கொடுத்ததாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த முறை, வேட்பாளர்களிடம் இருந்து பொருளோ, பணமோ, அன்பளிப்போ பெறும் வாக்காளர் மீதும் வழக்கு தொடரப்படும். இதற்கு, மூன்றாண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். ஆகவே, தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.