கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, மண்டல மாணிக்கம் பகுதிக்கு, இரண்டு வாரமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பஸ் ஏற 10 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
கமுதி அருகேயுள்ள மண்டல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் பழனிகுமார், செப்., 10ல், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மற்றும் பரமக்குடி கலவரம் எதிரொலியாக, அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி, ஆனைக்குளம், மண்டல மாணிக்கம் வழியாக, கமுதிக்கு வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. கடந்த இரண்டு வாரமாக பஸ்கள் இயக்கப்படாததால், மண்டல மாணிக்கம் பகுதி மக்கள், அருப்புக்கோட்டை மற்றும் கமுதிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். கமுதிக்கு வர, 10 கி.மீ.,க்கு மேல் நடந்து வருகின்றனர். அருப்புக்கோட்டையில் இருந்து வரும் பஸ்கள், ஆனைக்குளம் வரை வந்து, திரும்பி செல்கின்றன. இதனால், அருப்புக்கோட்டைக்கு செல்ல, பஸ் ஏறுவதற்கே எட்டு கி.மீ., தூரம் வரை நடந்து செல்கின்றனர். இதனால், பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது பள்ளி மாணவர்கள் தான். இவர்கள் நலன் கருதி பஸ்கள் இயக்கப்பட வேண்டுமென, அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் ராஜ்குமார் கூறுகையில், 'மாவட்ட மேலாளரிடம் இதுகுறித்து பேசியுள்ளோம். போலீஸ் அனுமதி கிடைத்தவுடன் பஸ்கள் இயக்கப்படும்' என்றார்.