மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது த.ம.மு.க.,
15 minutes ago
ஹிந்து விரோத ஆட்சி: நயினார் நாகேந்திரன்
18 minutes ago
மக்கள் நெஞ்சில் குத்தியுள்ளது
18 minutes ago
மத்திய அரசே முதல் வில்லன்
19 minutes ago
திண்டுக்கல் : பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட, 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல்லில் ஜன., 10ல் கொலை செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், முள்ளங்காட்டைச் சேர்ந்த அருளானந்தம், 24, ஆலங்குளம் அருகே இடையர்தவணையைச் சேர்ந்த ஆறுமுகசாமி, 29, ஆகியோர், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை திண்டுக்கல் போலீசார், மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில், 14 பேர் குற்றவாளிகளாக, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் தூண்டுதலின்படி, பசுபதி பாண்டியனை கொலை செய்ததாக அருளானந்தம், ஆறுமுகசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனால், சுபாஷ் பண்ணையார் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், கொலையில் ஈடுபட்ட அருளானந்தம், ஆறுமுகசாமி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர், அடுத்தடுத்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், மேலும் ஒன்பது பேர், இந்த கொலை வழக்கில் உள்ளனர். கொலையாளிகளிடமிருந்து இரண்டு கத்திகள், ரத்தக்கறை படிந்த சட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன, என்றார்.
சரணடைந்த இருவரைத் தவிர, மீதமுள்ள 12 பேரை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
கொலைக்கு உதவிய பெண் : திண்டுக்கல் நந்தவனம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலா, 45. இவரிடம் கொலையாளிகள், தங்களுக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் திட்டத்தைக் கூறி, பசுபதி பாண்டியனின் நடவடிக்கைகள் குறித்து அறிந்து தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டனர். இதற்கு நிர்மலா சம்மதித்துள்ளார்.
இதையடுத்து, கொலையாளிகளுக்கு வீடு பிடித்துக் கொடுத்துள்ளார். கொலை நடந்த அன்று, பசுபதி பாண்டியனை கண்காணித்து, உடன் பாதுகாவலர் இல்லாமல் தனியாக இருந்ததை, கொலையாளிகளுக்கு தெரிவித்துள்ளார். நிர்மலா, பசுபதி பாண்டியன் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சந்தேகம் ஏற்படவில்லை. கொலைக்கு உதவியாகவும், கொலையாளிகளுக்கு உளவு பார்த்ததாகவும் இவரை, ஐந்தாவது குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர்.
ஒன்றரை ஆண்டு திட்டம் : பசுபதி பாண்டியனை கொலை செய்ய, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, சிலர் திண்டுக்கல் வந்துள்ளனர். முதல்கட்டமாக, 2011 பொங்கலுக்கு முன், ஒன்பது பேர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தபோதும், பொறுமையாக ஓராண்டு காத்திருந்துள்ளனர்.
இவர்கள், திண்டுக்கல் நகரில் பல இடங்களில் தங்கி வந்துள்ளனர். கொலை நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன் தான், நிர்மலா மூலம் நந்தவனப்பட்டியில் வீடு வாடகைக்குப் பிடித்துள்ளனர். வீட்டிற்கு சைக்கிளில் சென்றுவந்ததால், உள்ளூர்காரர்கள் என நினைத்து யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
வேவு பார்க்க வந்து கொலைகாரர்களாயினர் : அருளானந்தம், ஆறுமுகசாமி மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர், பசுபதி பாண்டியனின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கவே திண்டுக்கல்லுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள், கொலை செய்ய ஏற்ற தருணம் என தகவல் கொடுத்தால், மற்றொரு கும்பல் வந்து கொலை செய்வது தான் திட்டமாக இருந்துள்ளது.
ஆனால் அன்று, அருகில் பாதுகாவலர் இல்லாத நிலை, தனிமையில் பசுபதி பாண்டியன் அமர்ந்திருந்தது ஆகியவை சாதகமாக இருக்கவே, வேவு பார்க்க வந்தவர்களே கொலைகாரர்களாக மாறியுள்ளனர். கொலையில் ஈடுபட்டவர்கள், அன்று இரவு திண்டுக்கல் பை-பாஸ் ரோடு பகுதியிலுள்ள ஒரு தோப்புக்குள் தங்கிவிட்டு, காலையில் தான் தப்பியுள்ளனர்.
15 minutes ago
18 minutes ago
18 minutes ago
19 minutes ago