நில மோசடி: தி.மு.க.,வினர்முன்ஜாமின் கோரி மனு
மதுரை:திருமங்கலம் அருகே நில மோசடி புகார் தொடர்பாக தி.மு.க., மதுரை நகர செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு(பொட்டு சுரேஷ்) உட்பட நால்வர் முன்ஜாமின் கோரி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று மனு செய்தனர்.திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் சிவனாண்டி. இவரது மனைவி பாப்பா. இவர்கள் மதுரை எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கிடம் வழங்கிய புகாரில், செங்குளத்தில் 5.14 ஏக்கர் நிலம் உள்ளது. மாவட்ட தொழில் மையத்தில் பெற்ற கடனுக்காக எங்கள் நிறுவனம் ஏலத்திற்கு சென்றது. கடன் பாக்கிக்காக தொழில் மைய அதிகாரிகள் துணையுடன், செங்குளம் நிலத்தை தி.மு.க.,வினர் தங்கள் வசமாக்கினர். இதுகுறித்து நந்தகுமார் என்பவர் பெயரில் பவர் பெற்றனர். அவர்கள் அளித்த முகவரியில் நந்தகுமார் இல்லை.பின் உசிலம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மாணிக்கமும், வேறு ஒரு நபரும் மதுரையில் உள்ள தி.மு.க., பிரமுகர் அலுவலகத்தில் வைத்து நிலத்தை எங்களுக்கு பதிவு செய்யும்படி மிரட்டினர். அங்கு வேறு சிலரும் இருந்தனர். வலுக்கட்டாயமாக எங்களை அழைத்து சென்று ரூ.40 லட்சம் மட்டும் கொடுத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கிருஷ்ணசாமி பெயரில் பவர் பத்திரம் பதிவு செய்து கொண்டனர், என குறிப்பிட்டனர்.இப்புகார் தொடர்பாக முன்ஜாமின் வழங்க கோரி தி.மு.க., நகர செயலாளர் கோ.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி சந்திரசேகரன், தி.மு.க., பிரமுகர் சேதுராமன் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தனர்.