உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடரும் மின்தடையால் தொழிற்சாலைகள் பாதிப்பு

தொடரும் மின்தடையால் தொழிற்சாலைகள் பாதிப்பு

சென்னை : முதல்வர் உத்தரவுக்கு பிறகும், தமிழக தொழிற்சாலைகளுக்கு, 20 சதவீத மின்கட்டுப்பாட்டை தளர்த்தாததால், தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை அப்படியே பயன்படுத்தும் திட்டமும் முழுமை பெறவில்லை. தமிழகத்தில் மே மாதம் முதல், அக்டோபர் வரை, காற்றாலை மின்சாரம் அதிகளவில் உற்பத்தியாகும். தமிழகம் முழுவதும், 6,000 மெகாவாட் மின்திறன் காற்றாலைகள் நிறுவப்பட்டு, அவற்றிலிருந்து, தினமும், 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. தமிழக மின்பற்றாக்குறைக்கு, காற்றாலை மின்சாரம் பெரிய அளவில் உதவுகிறது. ஆனால், காற்றாலை மின் உற்பத்தி நிரந்தரமாக இல்லாதது. காற்று அடிக்கும் நேரங்களில் மட்டுமே, காற்றாலை மின் உற்பத்தி அதிகமாகிறது. தற்போது, இரவு நேரங்களில் அதிகளவு காற்றாலை மின்சாரம் கிடைக்கிறது. ஆனால், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இதில் கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம், தொழிற்சாலைகளுக்கு, தினமும், 20 சதவீத மின்பயன்பாடு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தினமும், இரண்டு மணிநேர மின்தடையும் அமலாகிறது. கட்டுப்பாட்டை மீறி பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு, மின்வாரியம் அபராதம் விதிக்கிறது. இதனால், பல தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிப்புடன் வருவாய் பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் சிட்கோ தொழிற்பேட்டை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2008ம் ஆண்டு கணக்கின் படி, அப்போதைய மின் பயன்பாட்டு கணக்கில், 80 சதவீதம் மட்டுமே தற்போது தொழிற்சாலைகள் பயன்படுத்த முடியும். ஆனால், 2008ம் ஆண்டை விட, தற்போது மின்தேவை அதிகரித்திருக்கிறது. காற்றாலை மின்சாரத்தை வீணாகாமல் பயன்படுத்த, தொழிற்சாலைகளுக்கான, 20 சதவீத கட்டுப்பாடு தளர்த்தப்படும் என, சமீபத்தில் முதல்வர் அறிவித்தார். ஆனால், அவர் அறிவித்து, 15 நாட்கள் ஆன நிலையில், இன்னும் நிபந்தனை தளர்த்தப்படவில்லை. இதுதவிர, பகலில் இரண்டு மணி நேர மின்தடை ஏற்படுகிறது. தொழிற்சாலைகளின் இரண்டு ஷிப்டுகளை பாதிக்கும் வகையில் மின்தடை இருப்பதால், ஒவ்வொரு ஷிப்டிலும் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர சம்பளம் கொடுத்தாலும், ஒரு மணி நேர மின்தடையால் அவர்கள் ஓய்வெடுக்கும் நிலை உள்ளது. இதனால், தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மின்துறை உயரதிகாரி கூறும்போது, 'காற்றாலையை நம்பி கட்டுப்பாட்டை தளர்த்த முடியாது. நொடிக்கு நொடி காற்றாலை மின்சாரம் மாறுவதால், கட்டுப்பாட்டை தளர்த்தினால், மாநிலம் முழுவதும் சீரற்ற மின் சப்ளையாகி பாதிப்பு ஏற்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ