சேலம்:இடைப்பாடி அருகே, வரி மற்றும் டெபாசிட் வசூலில், 13.63 லட்ச ரூபாய் சுருட்டிய பெண் ஊராட்சி தலைவர், உடந்தையாக இருந்த அவரது கணவர் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரையும், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று, அதிரடியாக கைது செய்தனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடி ஒன்றியம், சித்தூர் ஊராட்சி, ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்,47. இவரது மனைவி ரமணி,43. சித்தூர் ஊராட்சி தலைவராக உள்ளார். அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஊராட்சி நிதியை சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2010-11ம் நிதியாண்டில், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உட்பட பல்வேறு இனங்களில் மொத்தம், 2 லட்சத்து 53 ஆயிரத்து 325 ரூபாய் வசூலிக்கப்பட்டு, 2 லட்சத்து 32 ஆயிரத்து 143 ரூபாய் மட்டுமே வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 21 ஆயிரத்து 182 ரூபாயை, ஊராட்சி தலைவர் ரமணி சுருட்டியது தெரியவந்தது.
அதே போல, ஊராட்சியில் மொத்தமுள்ள, 1,200 குடிநீர் இணைப்புகளில், 965 இணைப்புக்கான டெபாசிட் தொகை, தலா 1,000 ரூபாய் வீதம், 9 லட்சத்து 65 ஆயிரமும், குடிநீர் இணைப்புக்கான ஆண்டு கட்டணம், தலா 360 ரூபாய் வீதம், 3 லட்சத்து 47 ஆயிரத்து 400 ரூபாய் என மொத்தம், 13 லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் ஊராட்சி கணக்கில் வரவு வைக்காமல், கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளராக கலைவாணி, 2010 ஜூலை 30ல் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே, சித்தூர் ஊராட்சியில் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்பார்வையிட்டு, பணியை உறுதி செய்ததாக, போலி ஆவணங்கள் தயார் செய்து, 29 ஆயிரத்து 453 ரூபாய் சுருட்டியதும் தெரியவந்தது.
தவிர, ஊராட்சியில், 11 பம்ப் ஆபரேட்டர்களுக்கு பதிலாக, 14 பேர் வேலை செய்வதாக கணக்குக் காட்டி, 3 பேருக்கு சம்பளம் வழங்கியதாக மோசடி செய்ததும், ராமலிங்கம் என்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு, முறைகேடாக வீட்டுமனை அங்கீகாரம் வழங்கி, ஊராட்சி மற்றும் அரசுக்கு வரவேண்டிய அபிவிருத்தி கட்டணம், நன்னிலை வரி ஆகியன வசூலிக்காமல் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும், தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாவாயி, கடந்த 17ம் தேதி, மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊராட்சி நிதியில், 13 லட்சத்து 63 ஆயிரத்து 35 ரூபாயை சுருட்டிய ரமணி, இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் நாகராஜன், ஊராட்சி உதவியாளர் கோபால் ஆகியோரை, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.