டிராவல் ஏஜன்சிக்கு ரூ.4 லட்சம்: கங்குலிக்கு உத்தரவு
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, டிராவல் ஏஜன்சி நிறுவனத்துக்கு 4 லட்ச ரூபாய் கொடுக்கும்படி டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டில்லியை சேர்ந்த டிராவல் ஏஜன்சி நிறுவனம், சவுரவ் கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தது. கடந்த 2009ல் இந்த நிறுவனம் மூலம் டிக்கெட் பெற்றுக்கொண்ட கங்குலி, 42 ஆயிரத்து 376 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதி தொகையை கொடுக்கவில்லை. இதை எதிர்த்து, இந்த டிராவல் ஏஜன்சி டில்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, 'டிராவல் ஏஜன்சிக்கு, கங்குலி தர வேண்டிய நிலுவை தொகையை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை செலுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.