| ADDED : ஜூன் 27, 2024 01:40 AM
சென்னை:''வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன் நேரடி விவாதத்திற்கு தயார்,'' என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி சவால் விடுத்துள்ளார்.அவர் அளித்த பேட்டி:வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக, சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அழைப்பை ஏற்று, அவரோடு விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கொடுப்பதால், மற்ற சமூகங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்போது கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால், வன்னியர் ஒதுக்கீடு கேட்காமலே கிடைத்திருக்கும்.ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. பீஹாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில், இட ஒதுக்கீடு வரம்பு மீறியதை தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது புரியாமல் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எந்த கணக்கெடுப்பும் நடத்தாமல், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் வழங்க முடியும் என்றால், வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும்.ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.