கார் மோதி கல்லுாரி மாணவர் இருவர் காயம்
அரவக்குறிச்சி, ஜவேலாயுதம் பாளையம் அருகே, கார் மோதி இரு கல்லுாரி மாணவர்கள் காயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வெங்கம்பூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வாஜிக், 21. ஊஞ்சலுார் அருகே வாணியம்பாடி காட்டூரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 21. இவர்கள் இருவரும் கரூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லுாரியில், பி.காம் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று கல்லுாரிக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, நத்தமேடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார், டூவீலர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.வேலாயுதம்பாளையம் போலீசார், கார் ஓட்டுனரான ஈரோடு மாவட்டம் கோட்டை புதுார் பகுதியை சேர்ந்த திவாகர், 22, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.