சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மாநிலங்களின் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதனால், தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். இன்று முதல், 6ம் தேதி வரை, கடலோரம் அல்லாத மாவட்டங்களில், 39 டிகிரி செல்ஷியஸ் முதல், 41 டிகிரி செல்ஷியஸ் வரை, அதாவது, 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும்.உள்மாவட்டங்களில் பிற்பகலில், 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில், 70 சதவீதமாகவும் காற்றின் ஈரப்பதம் இருக்கும். கடலோரப் பகுதிகளில், 80 சதவீதம் வரை, காற்றில் ஈரப்பதம் நிலவும். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, ஈரோட்டில், 41 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தர்மபுரி, கரூர் பரமத்தி, சேலம், திருச்சி, வேலுார், 40; மதுரை, கோவை, நாமக்கல், திருத்தணி, 39; பாளையங்கோட்டை, தஞ்சாவூர், 38 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.மாநிலம் முழுதும் மொத்தம், 12 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியசை தாண்டி வெப்பம் பதிவானது. பாம்பன், 33; துாத்துக்குடி, 34; சென்னை நுங்கம்பாக்கம், நாகை, புதுச்சேரி, 35; மீனம்பாக்கம், 36; ஊட்டி, 25 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெப்ப அலை வீசுவது எப்போது?
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:'நம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில், ஜூன் மாதம் வரை கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெப்பத்தை பொறுத்தவரை, கடல்பகுதி, மலைப்பகுதி மற்றும் உள்பகுதிகளில் வேறுபாடு காணப்படும். மலைப்பகுதிகளில், 30 டிகிரி; கடலோரப் பகுதிகளில், 37 டிகிரி; உள்பகுதிகளில், 40 டிகிரி செல்ஷியஸ் என்பது இயல்பான அளவு. இவற்றிலிருந்து, 4.6 - 6 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவானால், வெப்ப அலை வீசுவதாகக் கருதப்படும். இவற்றைவிட கூடுதலாக வெப்பநிலை இருந்தால், கடுமையான வெப்ப அலை வீசுவதாகக் கருதப்படும். கடற்கரையோர பகுதி களில், கடல் காற்றும், தரைக்காற்றும் வீசும் என்பதால், வெப்பத்தின் தன்மை மாறலாம். அதேபோல, உள்பகுதிகளில் மேகக்கூட்டம், காற்றின் ஈரப்பதம் காரணமாகவும், வெப்பநிலையில் மாற்றம் இருக்கலாம். இவற்றை எல்லாம் தினந்தோறும் கண்காணித்து தான், அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு எந்த அளவிற்கு வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது? எந்தெந்த மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக பதிவாகும் என்பதை, வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். கோடை மழை பற்றி, பருவமழையைப் போன்று முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. அந்தந்த நேரத்தில் ஏற்படும் காற்றின் தன்மையைப் பொறுத்து, கோடை மழை இருக்கும். அதை இரண்டு தினங்களுக்கு முன்னரே கணிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.